28 August 2009

புள்ளி விவர கணக்கெடுப்புகளும் தில்லுமுல்லுகளும்

சமீபத்தில் அமெரிக்கா (என நினைக்கிறேன்) நடத்திய புள்ளி விவர கணக்கெடுப்பின் படி உலகில் அதிகமாக புகை பிடிக்கும் பெண்கள் வரிசையில் அமெரிக்க பெண்கள் முதலாவதாகவும், சீன பெண்கள் இரண்டாவதாகவும் அடுத்து இந்திய பெண்கள் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பதாகவும் அறிந்தோம். பொதுவாக தங்கள் சமுதாயத்திற்கு கெட்ட பெயர் வாங்கி தருகிற இதை போன்ற செய்திகளை படித்த உடன் அதிலும் பெண்களை போற்றுகிற நம் மக்கள் எந்த அளவு இதை பெரிது படுத்தி பேசி மனம் நொந்து இருப்பார்கள் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே போதும்.

ஆனால், இந்த கணக்கெடுப்பில் மறைந்திருக்கும் சில பல தில்லுமுல்லுகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்து பார்த்தால், இதில் எந்த அளவுக்கு நாமெல்லாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்பது புரியும்.

இன்றை உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் இவை மூன்றுகள்தான். நாம் அறிந்தவரை, இந்த கணக்கெடுப்பில் இவ்வொவ்வொரு நாடுகளில் உள்ள புகை பிடிக்கும் பெண்களின் மொத்த எண்ணிக்கைதான் அதிகமே தவிர, இதையே விகிதாச்சாரப்படி கணக்கு பார்த்தால், கட்டாயம் இந்தியாவும், சீனாவும் ஏறக்குறைய பட்டியலின் கடைசி இடத்திற்கே போயிருக்கும் என்பதை திடமாக நம்பலாம்.

அதாவது, 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், சற்றே 1% அல்லது 2% பெண்களே புகை பிடிப்பவர்களாக இருந்தால் கூட, இதுவே 1.1 கோடி அல்லது 2.2 கோடி பெண்கள் புகைபிடிப்பவர்கள் என அறிய கொடுக்கிறது. இந்த கோடிகளை வைத்து பார்க்கையில், அனைவருக்கும் இது பிரமிப்பாகவே தெரியும். ஆனால் ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் இதே போன்ற விகிதாச்சார கணக்குப்படி புகைபிடிக்கும் பெண்களின் புள்ளிவிவர கணக்கு எடுத்துப் பார்த்தால், அவர்களே முதல் பத்து அல்லது இருபது இடங்களையும் ஆக்கிரமித்து கொள்வார்கள் என்பது தின்னம். மேற்கத்திய நாடுகளில் உள்ள பெண்கள் ஆண்களை விட அதிகம் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். சில நாடுகளில் இவர்கள் 30% அல்லது 40% தாண்டிவிடுவார்கள் என்றே சொல்லலாம்.

எனவே (பாரபரிய பழங்குடி) மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியா சீனா ஆகிய நாடுகளில் உள்ள புகைபிடிக்கும் மொத்த பெண்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்காமல், ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகை என்ன, அதில் உள்ள புகை பிடிக்கும் பெண்களின் தொகை என்ன, விகிதாச்சாரப்படி இது எந்த வகையில் வரிசை படுத்தப்படுகிறது என்பதை நாம் நன்றாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டியது அவசியம்.

இது போன்ற பல தவறான புள்ளி விவரங்களை நம் ஊடகங்கள் கொஞ்சமும் அலசி பார்க்காமல் அதில் மறைந்திருக்கும் தில்லுமுல்லுகளை அப்பாவி பொது மக்களுக்கு சரிவர விளக்கியும் கூறாமல், வெறுமனே இணையம் மூலம் வந்த செய்திகளை தங்கள் தளங்களில் வெளியிட்டு என்னவோ யாரும் எதிர்பாராத அற்புதமான புதிய வகை அதிரடி செய்திகளை முதலில் தருவதாக எண்ணி பெயர் தட்டிக்கொள்ள முயற்சிப்பது தண்டிக்கப்படவேண்டிது அவசியம். இதனால் அவமானத்திற்கு உள்ளாகி அசிங்கப்படுவது நம் சமுதாய அப்பாவி மக்களே.

இதே போல்தான், சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய புள்ளி விவர கணக்கும் நம்மை எல்லாம் அவமானத்திற்கு உள்ளாக்கியது. இனிமேலும் நாம் அனைவரும் இதுபோன்ற சமுதாயத்தை அசிங்க படுத்தும் ஆதாரமற்ற புள்ளி விவர கணக்கெடுப்புகளை கண்மூடித்தனமாக நம்பாமல் தீர ஆராய்ந்து அலசி உண்மை என்னவென்றும், தில்லுமுல்லுகள் என்வென்றும் நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.