29 மே, 2007

தூங்கும் சக்திகளும், உசுப்பி எழுப்பும் முறைகளும்.

இந்த கட்டுரை முக்கியமாக ஏழ்மையில் வாழும் அதிக படிப்பறிவு பெற இயலாத இளைஞர்களை கருத்தில் கொண்டு எழுதியது.
இன்றைய காலங்களில் வசதி உள்ளவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடனை உடனை வாங்கி தங்கள் பிள்ளைகளை எப்படியாவது கடினப் பட்டு மேல் படிப்புகளுக்கு படிக்க வைத்து வெற்றி பெறுகின்றனர். ஆனால் வசதி அற்றவர்கள் கடன் வாங்க தகுதி அற்றவர்கள் போன்றவர்களின் பிள்ளைகள் முடிந்த வரை படித்துவிட்டு சீக்கிரமே குடும்பத்திற்கு உழைக்க வேண்டி மிகச்சாதாரண வேலைகளை செய்கின்றனர். இது போன்ற வேலைகளில் முன்னேற்றம் என்பது அவ்வளவு கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. உதாரணத்திற்கு வெகுகன ஊர்திகளில் ஓட்டுனர், சரக்கு ஏற்றும் தொழிளாலி கடைசி வரை அதையே செய்ய வேண்டியதுதான். இவர்கள அரசாங்கம் கொடுக்கும் கடன் வசதிகளை வைத்து சிறு தொழில் ஆரம்பிப்பது என்றால் அதில் கணக்கு வழக்கு பார்த்து பொறுப்பான நிர்வாகம் செய்ய முடிய இயலாதவர்கள். இவர்களது பெற்றோர்களை போலவே தினக்கூலி பெற்று வாழ்வதின் வழிவரும் பழக்கங்கள். இவர்களைப் போன்றவர்களை அதே நிலையில் விட்டு அழிந்துபோக விடாமல் சில மாற்று வழிகள் மூலம் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வைக்கலாம்.
விளையாட்டுதான் (Sports )அந்த புது வழி.
இந்தியாவில் மிக புகழடைந்து இருக்கும் கிரிக்கட் விளையாட்டினால் இவர்களுக்கு எந்த வித பயனும் கிடைக்கப் போவதில்லை. இந்த விளையாட்டை ஒரு உயர்குல விளையாட்டுபோல் ஆக்கிவிட்டு இருக்கின்றனர். ஊடகங்கள், ஆடம்பரங்கள், ஷோ-பிஜ் காட்சிகள், அதிக பண புழக்கம் நிறைந்த இதில் இவர்களால் கொஞ்சமும் முன்னுக்கு வரவே முடியாது. மற்றவர்கள் இவர்களை தலை தூக்க விடவே மாட்டார்கள்.
கால் பந்து விளையாட்டுகள் மூலம் இவர்களை முன்னுக்கு கொண்டு வரலாம். ஐரோப்பா, ஆப்ரிக்கா, பிரேசில் மேலும் ஒரு சில ஆசிய நாடுகளில் இவ்விளையாட்டின் மூலம் நிறைய படிப்பறிவு மற்றும் நிர்வாக திறமை எதுவுமே இல்லாத சமுதாயத்தால் கைவிடப்பட்ட பல இளைஞர்கள் முன்னுக்கு வந்து இருக்கிறார்கள்.
ஏழ்மையான ஆப்ரிக்க நாடுகளில் அவர்களுக்கு வேறு எதுவும் பொழுது போக்க வழியின்றி முக்கியமாக வேலை இல்லாத இளைஞர்கள் சதா கால்பந்து விளையாடிக் கொண்டே இருப்பார்கள். இதிலே நல்ல பழக்கப் பட்டு நல்ல பெரிய குழுமங்களில் விளையாடி பொது சனங்களுக்கு ஊடகங்களுக்கு அறிமுகமாகி பிறகு மேலை நாடுகளில் போய் விளையாடி நிறைய பணமும் புகழும் சம்பாதிக்கிறார்கள். நிறைய ஆப்பிரிக்க நாடுகளில் சிறுவர்களை வெளி நாட்டு கும்பினிகளே மறைமுகமாக பணவசதி செய்து அங்கேயா தேர்வுகள் நடத்தி திறமையுள்ள விளையாட்டு வீரர்களை தங்கள் நாட்டுக்கு வரவைத்து குடி உரிமையும் கொடுத்து அனைவரும் பலன் அடைகிறார்கள் ( இருந்தாலும் தாய் நாட்டுக்கு ஒருவகையில் இது இழப்புதான்).
பிரான்சில் உள்ள கால்பந்து குழுமங்களில் 80% அந்நிய இனத்தவர்களே. இதிலும் முக்கியமாக, பேரிஸ், லியோன், மர்சேய் போன்ற முக்கிய பெரிய நகரங்களை சுற்றி கொஞ்சம் தள்ளி உள்ள புறநகர்களில் உள்ள அந்நிய இனத்தவர்கள் 80% வசிக்கின்றனர். மாற்று நிறம், கலாச்சாரம், மதம் வாழும் முறைகள் காரணமாக வேலைகளில் பொறுப்புள்ள பதவிகள் இவர்களுக்கு மறுக்கப் பட்டு வருகின்றன. இதனால் வேதனை அடைந்த சிலர் தவறான வழிகளில் சென்று வாழ்க்கையை வீணடிப்பது தவிர்க்க முடியாத கசக்கும் உண்மை. இது போன்ற புறநகர்களில் வாழும் இளைஞர்களுக்கு இந்த கால்பந்தாட்ட விளையாட்டு கைகொடுக்கும் தெய்வம் என சொல்லலாம். உதாரணத்திற்கு கடைசியாக நடந்த கால்பந்து விளையாட்டில் ஆடிய 'ஜிதான்' எனும் விளையாட்டு வீரரை பற்றி அறிந்திருப்பீர்கள். இவரும் இந்த வகை மக்களை சேர்ந்தவர்தான். இன்று உலகப்புகழ் பெற்று புகழின் உச்சியில் இருக்கிறார். விளையாட்டில் இருந்து ஓய்வு எடுத்துககொண்ர் இவர் இன்றைக்கு ஐ.நா சபைக்கு தொண்டு செய்து வருகிறார். இவர்களைப் போல் எண்ணற்ற இளைஞர்கள் தங்கள் உடல் திறனைக் கொண்டே மிகுந்த பயிற்சிகள் எடுத்து நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் இங்குள்ள மற்ற இளைஞர்களுக்கு நல்ல உதாரணம் வேறு.
எனவே நம் நாட்டிலும் (முக்கியமாக தமிழ்நாட்டில்) இந்த வகை கால்பந்தாட்ட விளையாட்டில் அதிக அக்கறை செலுத்தி அதிகம் படிக்கத் தவறிய இளைஞர்களுக்கு மாற்றுவழியில் வெற்றி பெறவைக்கலாம். இவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றலாம். விளையாடுவதால் போட்டி மனப்பான்மை உருவாகும். நல்ல விதமாக சீரிய பயிற்சிகள் கொடுத்து மற்ற மாநிலங்கள் மற்ற நாடுகள், மற்ற கண்டங்களை சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட வைத்து உலக புகழ் பெறலாம். இந்தமாதிரியான விளையாட்டுகளை சுற்றி நிறைய வியாபாரமும் உண்டு. இதனால் பல ஆயிரக்கான புதிய தொழில்களும் உருவாகும்.
தற்போதைய காலங்களில் இளைஞர்கள் அனைவருமே மருத்துவம், கணினி வல்லுர், கட்டிட வல்லுனர் விஞ்ஞானததுறை, வியாபாரம், தொழில் அதிபர், அரச்சாங்க வேலை, அதிகாரிகள், அரசியல், திரை உலகம், பதவி எனபனவற்றிலே குறியாக இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது இந்த வழிகளை விட்டால் இந்தியாவில் முன்னேறுவதற்கு வேறு வழிகளே இல்லை என்ற முடிவுக்கே தள்ளப் படுகிறோம். ஆனால், இவைகளைத் தவிர வேறு மாற்று வழிகளிலும் முன்னுக்கு வரலாம்.
நடந்து முடிந்த பல உலக கோப்பை கால்பந்து விளையாட்டு போட்டிகளில் இதுவரை இந்தியா பங்கேற்காதது வெட்கத்துக்கு உரியதே. நம் நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கு நல்ல அருமையான வீரர்களை உருவாக்க முடியும். கலைஞர் பதவி ஏற்ற கையில் விளையாட்டுகளுக்கு என சில முக்கிய்த்துவம் மற்றும் சலுகைகள் என அறிவித்ததும் ஞாபத்தில் இருக்கிறது.
புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், பணவசதி உள்ளவர்கள் இதில் முதலீடு செய்து இதையே தொழிலாகவும் செய்யலாம். தொழில் அதிபர்கள் இதிலும் நிறைய பணம் கொழிக்க முடியும். கிரிக்கட் விளையாட்டை போல் இதற்கும் புகழ் மற்றும் மக்கள் மத்தியில் விளம்பரம் கிடைத்துவிட்டால் நிறைய பணம் மற்றும் முக்கியமாக நிறைய சிறு தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாகும்.
சதா தொலைக்காட்சி, திரைப்படம், இணையம், அரசியல், மது, வீண் வம்பு என்றில்லாமல் கோயில், குலம், இசை, கலை, மொழி, இலக்கியம், போல் இதற்கும் போதிய முக்கியத்துவம் கொடுத்து ஆராக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக