3 அக்டோபர், 2007

தண்ணீர் குடித்த குற்றத்திற்காக, சிறுமி தனத்தை ஆசிரியர் அடித்ததில் பார்வை பறிபோனது! இன்று 12 ஆண்டுகள் கழித்து .....

தலித் சிறுமி இவர், 1995 சூலை மாதத்தில் ஒரு நாள் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தாகத்திற்காக பள்ளியில் உள்ள குடிநீர்ப் பானையில் தண்ணீர் எடுத்துக் குடித்தார். இக்’குற்ற'த்திற்காக, அந்த வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியம் பிரம்பால் அடிக்க, அது தனத்தின் கண்ணில் பட்டு அவருடைய பார்வை பறிபோனது

dhanam[1]

தற்பொழுது 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனம் எப்படி இருக்கிறார் என்பதை அறிய, ‘ஆனந்த விகடன்' (15.8.07) அவரை சந்தித்துள்ளது. அந்தப் பேட்டியில் தனம் பின்வருமாறு கூறியிருக்கிறார் : ‘சூரிய வெளிச்சம் பட்டாலே கண்ணுல தண்ணிவர ஆரம்பிச்சிருதுண்ணே. ஒரு மணி நேரத்துக்கு மேல புத்தகத்தைப் பார்த்துட்டே இருந்தா, கண்ணு வலிக்க ஆரம்பிச்சிடுது. மாசத்துக்கு ஒரு தடவை இன்னும் டாக்டருகிட்ட போய் கண்ணைக் காட்டிட்டுதான் இருக்கோம். குணமாகலை. இப்போ இங்கு ஜலகண்டபுரத்துல அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிச்சிட்டு இருக்கேன். எங்க ஊருலயே பத்தாவதுக்கு மேல ஸ்கூலுக்கு போயி படிக்கிறது நான் மட்டும்தான். லீவு நாள்னா நானும் செங்கல் சுமக்கப் போயிடுவேன்.

அன்னிக்கு பள்ளிக்கூடத்துல எதுக்காக சாரு என்னை அடிச்சாருன்னு அப்போ எனக்குத் தெரியலை. ஆனா, இன்னிக்கு எனக்கு நல்லாப் புரியுது. நாங்க கீழ் சாதிக்காரங்களாம். அதனால மேல் சாதிக்காரங்க குடிக்கிற டம்ளர்ல நாங்க தண்ணி குடிக்கக் கூடாதாம். அப்படி நான் குடிச்சதாலதான் அன்னிக்கு சார் அடிச்சிருக்காரு.

சாதிக் கொடுமைங்கிறது தண்ணியில மட்டும் இல்லீங்க, இதோ எங்க ஊரைச் சுத்தி பவர் லூம் தறி ஓடுது. ஆனா, தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்க யாருக்கும் அங்கே வேலை கொடுக்க மாட்டாங்க. இத்தினி வருஷம் கழிச்சும் அப்படியேதான் இருக்கு ஊரும் உலகமும். ‘எங்கே, எங்க ஊருல ஏதாவதொரு குடியானவுங்க வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டுப் போய், ஒரு டம்ளர் தண்ணி வாங்கிக் கொடுத்துடுங்க பார்க்கலாம்?’

சிறுமி தனம் மிக ஆழமான, இயல்பானதொரு கேள்வியை தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து கேட்டிருக்கிறார். இது, தனிப்பட்ட தனத்தின் குரல் மட்டும் அல்ல. தமிழ் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ‘தனம்' களின் ஆதங்கம்!

இன்னும் 12 ஆண்டுகள் கடந்தாலும், அவருக்கு ‘குடியானவுங்க' தண்ணி கொடுக்கப் போவதில்லை. ‘வந்தவர்களை வாழ வைக்கும் தமிழ்ப் பண்பாடு' என்று கூப்பாடு போடுகிறார்கள். ஆனால், இங்கு வாழ்பவர்களின் தவித்த வாய்க்கு தண்ணீர்கூட தருவதில்லை! ‘பக்கத்து மாநிலத்துக்காரன் தண்ணீர் தர மறுக்கிறான்' என்று வெகுண்டெழுகிறவர்கள், தங்கள் கவனத்தை சொந்த மாநிலத்துக்காரன் பக்கமும் கொஞ்சம் திருப்புங்களேன்!

நன்றி தலித் முரசு.

10 கருத்துகள்:

  1. அந்த ஆசிரியருக்கு கிடைத்த தண்டனை பற்றி ஏதேனும் விவரம் தெரியுமா மாசிலா?தூக்கில் போட்டிருந்தாலும் தப்பே இல்லை.பாடபுத்தகம் ஒவ்வொன்றிலும் இருக்கும் முதல் வரியே "தீண்டாமை என்பது பெருங்குற்றம்" என்பதுதான்.அதை சொல்லி கொடுக்க வேண்டியவர்களே அதை கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருப்பது வெட்ககேடு.

    பதிலளிநீக்கு
  2. சங்கடமும் கூச்சமுமாக இருக்கிறது இந்தச் சமூகத்திலா நாமும் வாழ்கிறோம் என்று.

    தூத்துக்குடியில் ஒருமுறை வ.உ.சி. காலத்தில், வெள்ளைக்கார துரை ஒருவருக்கு பாதி சவரம் செய்த நிலையில் நான் இனிமேல் உங்களுக்கு சவரம் செய்ய மாட்டேன் என்று சவரத் தொழிலாளி மறுத்து விட, அவர் சார்ந்த சங்கத்தினர் எவரும் அந்தத் துரைக்கு மீதி சவரம் செய்து விட மறுத்து அவர் மதுரை போய்த் தான் தன் முகத்தைச் சரி செய்து கொள்ள முடிந்தது என்பது சரித்திரம் குறித்து வைத்துள்ள சம்பவம்.

    செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம் என்று இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சகோதரர்கள். இவர்கள் ஒற்றுமையாக, ஆணவம் பிடித்த உயர்ஜாதியினருக்கு சேவை செய்வதில்லை என்று முடிவெடுத்து உறுதிப்பட நின்றால் அவர்களின் மொத்தப் பிழைப்பையும் நாறடித்து விடலாமே. இந்தக் கோணத்தில் ஏன் யாரும் செயல்படுவதில்லை என்பது என் நீண்ட கால ஆதங்கம்.

    என் எண்ணத்தில் தவறு இருந்தால் விளக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். திருத்திக் கொள்ள சம்மதம்.

    RATHNESH

    பதிலளிநீக்கு
  3. மிகவும் வருந்தத்தக்க நிலை. மிகமிக. என்னய்யா கொடுமை இது...சாதீ..சாதீன்னு ஏன் இப்பிடி அலையுறாங்களோ. மனுசன மனுசனா மதிக்காம என்னய்யா வாழ்ந்து குப்புற விழுந்தீங்க. சீச்சீ! நாம அடுத்தவங்கள நம்மள விடக் குறைச்சலா நெனக்கிறப்போ..நம்மளை ஒருத்தன் குறைச்சலா நெனைக்க வாய்ப்பிருக்குங்குறது ஏன் புரிய மாட்டேங்குதோ.

    அம்மா தனம், எப்பாடு பட்டாவது படி. அந்த ஊர விட்டு வெளியூரு வந்துரு. நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். நல்லாயிருப்ப.

    பதிலளிநீக்கு
  4. மாசிலா!
    இச் செய்தியை அன்றைய தினங்களிலும் படித்துள்ளேன்.
    தமிழன் என்று சொல்லத் தலைகுனிய வேண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
  5. மாசிலா,

    அந்த ஆ'சிறியனின்' படம் இருந்தால் தேடி பிடிச்சு போடுங்க. காரி உமிழனும் அவன் முகத்தைப் பார்த்து.

    பதிலளிநீக்கு
  6. After 12 years ,situvation never improved ?

    //சங்கடமும் கூச்சமுமாக இருக்கிறது இந்தச் சமூகத்திலா நாமும் வாழ்கிறோம் என்று.//

    Repeat !!!!

    best wishes for Dhanam .

    If any organization helping her please post their address .

    பதிலளிநீக்கு
  7. antha vathiyaar eranthutaar....


    avar appadipatavar illa ...

    intensionala avar adikala...

    jathi per solli paavam avara kodumapaduthi konnutanga

    பதிலளிநீக்கு
  8. தமிழ் நாட்டில் 7 வருடம் வாழ்ந்திருக்கிறேன், மாணவர் மத்தியிலேயே இந்த சாதி சிந்தனை இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். சலுகைகள் சாதியடிப்படையில் இல்லாமல், வருமானத்தின் அடிப்படையில் அல்லது வசதிகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டால் வாழ்க்கையில் பின் தள்ளப்பட்டோருக்கு விமோசனம் கிடைக்கும். படிப்பதற்கும் சாதி சான்றிதழ் இன்றும் கேட்கப்படிகிறதே ஏன்? விழிப்புணர்ச்சி என்பது மாணவ பருவத்திலேயே ஊட்டப்பட வேண்டும். நம்மால் ஆதங்கத்தை மாத்திரமே கொட்ட முடியும் தீர்வை அல்ல.

    பதிலளிநீக்கு
  9. வருகை தந்து கருத்து கூறிய, விளக்கங்கள் கேட்ட, அறிவுரைகள் கொடுத்த
    செல்வன்
    RATHNESH
    G.Ragavan
    யோகன் பாரிஸ்(Johan-Paris)
    cooool
    காரூரன்
    கோவி.கண்ணன்
    ஆகிய அனைத்து மனித நேயங்களுக்கு மிக்க நன்றி.
    சீரிய விழிப்புணர்வும் தேவைக்கு ஒன்றாக உழைப்போம்.

    பதிலளிநீக்கு
  10. என் அன்பு சகோதரர் மாசிலா அவர்களுக்கு வணக்கம்.
    தங்களின் சமூக எழுத்துக்கள் யாவரையும்(மனிதர்களை மட்டும்) உருக வைத்துவிடுகிறது, இம் மண்ணில் நடைபெறும் கொடுமைகளை வெறும் எழுதுக்கள் மூலமாக மட்டும் பதிவுசெய்வது வீன். இதையும் தான்டிதான் போகவேண்டியுள்ளது.

    அழித்தொழிக்கப்படும் வாயில்லா பூச்சிகளான பூர்வகுடியாம் தலித் மக்களை காப்பது நமது பொருப்பு, உங்களுடன் தோள்கொடுக்க‌ தம்பியான என்னையும் இனைத்துக்கொள்ளுங்கள்.

    சாதியை எதிற்க்காத‌ எவ‌னையும் த‌லைவ‌னாக‌ ஏற்றுக்கொள்ளாதீர்க‌ள்.. அது எந்த‌ நாயாக‌ கூட இருக்கட்டும்.. நம்மை ஏமாற்றி ஏச்சிபிழைக்கும் சில‌ த‌த்துவ‌ங்க‌ளை த‌விடு பொடியாக்கி நம் ம‌க்க‌ளை விழிப்புண‌ர்வு அளிக்க‌வேண்டிய‌து ந‌ம‌து பொருப்பு.
    அப்ரஹாம்

    ந‌ண்றி

    பதிலளிநீக்கு