12 அக்டோபர், 2007

வந்தேறி குடிமக்களின் பெருமை மற்றும் வரலாற்றை போற்றி பாரிசில் ஒரு அறிவாலையம்.

"LA CITE NATIONALE DE L'HISTOIRE DE L'IMMIGRATION!"

இரண்டாவது உலகப்போருக்கு பிறகு பிரான்ஸ் மிகவும் சீரழிந்த நிலையில் இருந்தது. பல கட்டடங்கள், பாலங்கள், தொழிற்சாலைகள் இடிந்து போயிருந்தன. பொருளாதார உதவிக்கு அமெரிக்காவின் PLAN MARSHAL என அழைக்கப்பட்ட போர் கடன் ஒப்பந்தங்களை நம்பி இருக்க வேண்டியதாய் இருந்தது. அநேக இளைஞர்கள் போர் காரணங்களால் மறைந்து போயிருந்தனர். கட்டிடங்கள், பாலங்கள், பாதைகள் கட்டுவது மற்றும் தொழிற்சாலைகளில், பட்டாளங்களில் கடின உடலுழைப்பிற்கு தேவையான மனித சக்திகளுக்கு மிகுந்த பஞ்சம் நிலவியது. அண்டை நாடுகளான ஜெர்மெனியில் நிலமை இதைவிட மோசமாக இருந்தது. அய்ரோப்பா முழுதிலும் மனித சக்திகளுக்கான தேவைகள் அதிகமாக இருந்தன. அக்காலங்களில் பிரான்சின் காலனி நாடுகளான ஆப்ரிக்க, அரேபிய, ஆசிய நாடுகளில் இருந்து நிறைய மக்கள் தருவிக்கப்பட்டனர். இதில் இளைஞர்கள் மற்றும் வாலிபர்களே முக்கியமானவர்கள். தங்களது கடின உழைப்பினால் பிரான்சை கட்டி எழுப்பியவர்கள் இவர்களே. இவர்களில் எண்ணிலடங்கா மனிதர்கள் போரில் சண்டைகளில் மாண்டவர்களும் உண்டு.

நாளடைவில் இவர்களே இந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் சிறிது சிறிதாக வெறுக்கப்பட்டனர். இதற்கு ஒரு முக்கிய காரணமாக 70/80 களில் தலையெடுத்த வேலை இல்லாத திண்டாட்டத்தை கூறலாம். இதை அடிப்படையாக வைத்து வலதுசாரி கட்சிகள் நடத்திய அரசியல் ஆதாய வியாபாரம் இந்த பிரச்சினைகளில் மிகுந்த தொந்தரவுகளை இம்மக்களுக்கு உண்டாக்கியது. இதை வைத்தே சிறிது சிறிதாக இன வேறுபாடு பார்க்கும் மனப்பான்மையும் உருவாயிற்று. மேலும் ஆப்ரிக்கா மற்றும் அரேபியா நாடுகளில் இருந்து வந்திரங்கியவர்கள் இசுலாமியர்கள் ஆகையால், வலதுசாரிகள் தங்களது ஓட்டுப்பொறுக்கி அரசியல் ஆதாயத்திற்கு இந்த சந்தர்ப்பத்தையும் நழுவ விடவில்லை. பிரான்சின் இசுலாமிய வந்தேறிகளால் அய்ரோப்பிவிற்கே ஆபத்து என்கிற பீதியை வேறு கிளப்பி விட்டிருந்தனர்.சுறுக்கமாக சொல்வோம் ஆனால், பிரான்சின் திறமையற்ற அரசுகள், அன்றைய தலைவர்களின் அனைத்து பொறுப்பற்ற செயல்களால் உண்டான இடறுகள் யாவற்றிற்கும் இவர்களே பலிகடாவாக ஆக்கப்பட்டனர். இப்படி வெறுக்கப்பட்ட இம்மக்கள் தங்கள் தாய்நாட்டின் வேர்களும் அறுக்கப்பட்டு வந்தேறி உழைத்து உருவாக்கிய நாட்டிலும் மரியாதை இழந்து அந்நியர்களாக கிடந்து மன உளைச்சல்களில் சிக்கி, குடி போதைக்கு அடிமையாகி ஏழ்மையில் வறுமையில் புற நகர்களில் சிரழிந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

இவ்வாண்டு ஆரம்ப காலம்வரை அதிபர் பதவி வகித்த திரு. ழாக் ஷிராக் அவர்கள் இம்மக்கள் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்தார். அதிலும் முக்கியமாக ஆப்ரிக்க கறுப்பின மக்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்டவராக இருந்தார். 2003 வாக்கில் இவரின் அலோசனைப்படி, பிரான்சுக்கு உழைத்த, இன்றும் உழைத்துக் கொண்டிருக்கிற அந்நிய இன மக்களின் நினைவாக ஒரு வளாகத்தை உருவாக்க முடிவு செய்தார். அதன் வழி வந்ததே இந்த அறிவாலையம். பாரிசின் விளிம்பில் அமைந்திருக்கும் இவ்வளாகம் இந்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதியன்று கொஞ்சம் மர்மமான முறையில் திறக்கப்பட்டது

தற்போது ஆட்சியில் இருக்கும் "நிக்கோலா சர்கோஜி"யின் வலதுசாரி ஆட்சியானது திரு. "ழாக் ஷிராக்" அவர்கள் இம்மக்கள் மீது காட்டிய பாசத்தை காட்ட தெரியாதது மட்டுமில்லாமல், கடந்த தேர்தலின் போது, பொதுவாகவே அந்நிய இன வந்தேறிகள் எதிர்ப்பு வாத வாக்குறுதிகள் அள்ளி வீசியும் ஆட்சியை பிடித்தது. இந்த அரபு, ஆப்ரிக்க ஆசிய இன மக்கள் மீதான நிக்கோலா சர்கோஜியின் எதிர்ப்பு மனநிலை நாடறிந்த உண்மை. இவரே கடந்த ஆண்டுகளில் உள்துறை அமைச்சராக இருந்தபோது, இம்மக்கள் மீது போலீஸ் அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டு பல இம்சைகளை கொடுத்து வந்தார்.

இன்றைய தேதிக்கு பிரான்சில் இதுபோன்ற மக்களுக்கு எதிராக இன்னும் வேறொரு அறுவறுக்கத்தக்க சட்டம் ஒன்று பதிவாகி இருக்கிறது. அந்நியர்கள், அரசு அதிகார இயந்திரத்திடம் தங்களுக்கு பிறந்த பிள்ளைகள் எனறு அறிவிப்பு செய்யும்கால், அப்பிள்ளைகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த இடம் தருவதே இப்புது சட்டத்தின் பெரிய அபத்தம். இப்படியாக ஒரு பக்கம் குழந்தையை கிள்ளி விட்டுக்கொண்டும் இன்னொரு பக்கம் அக்குழந்தையை தாலாட்டுவதைப்போல் நடித்தால் மக்கள் சும்மாவென இருக்கமாட்டார்கள் என்பதை புரிந்து கொண்ட அரசாங்கம், இம்மணடபத்தின் திறப்பு விழாவை சாமர்த்தியமாக மர்மமான முறையில் தவிர்த்தும் இருட்டடிப்பும் செய்துவிட்டன. உளை வாயை மூடலாம். ஆனால், ஊர் வாயை ...? பூனை தன் கண்களை மூடிக்கொள்வதால், முழு உலகமுமா இருண்டு விடப்போகிறது?

மனித நேயம் நிறைந்த திரு. ழாக் ஷிராக் அவர்களுக்கு நன்றிகள் பல உரித்தாகுக. தங்கள்து கடின உழைப்பால் இடிந்த பிரான்சை கட்டியெழுப்பி தலை நிமிர வைத்த அனைத்து அந்நிய நாட்டு வந்தேறி குடிமக்கட்களுக்கும் நன்றி கூறுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக