எப்போதுமே அம்மா எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென எரிந்து விழுவார். நாங்களும் அப்படியே பழகிவிட்டோம். காலையில் கண்விழித்து படுக்கையில் இருந்தபடியே முணக ஆரம்பித்துவிடுவார். ஒரே படபடப்பு, எதிலுமே ஒழுங்கு இல்லை, அடிக்கடி வேலைக்கு உடம்பு சரியில்லை என மட்டம் போடுவது, கடிதங்கள் போர் போன்று குவிந்து கிடந்தாலும் அவைகளை சட்டை செய்வதில்லை, அழுக்கான உடைகள், சரியான நேரத்தில் படுப்பதில்லை, சரியான முறையில் உணவு உண்பதும் இல்லை. எதுவுமே சரியில்லை. யாரிடமும் பேச்சு வைத்துக் கொள்வதில்லல. இருக்கிற கொஞ்ச நெஞ்ச தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதிலேயே கருத்தாக இருந்தார். மொத்தத்தில் ஒரு தறிகெட்ட இயந்திரத்தை போலவே தென்பட்டார். ஆரம்பத்தில் இப்போக்கினை கண்டு மிரண்டுபோன நாங்கள், இப்போது அம்மாவை பார்த்து பரிதாபப் பட ஆரம்பித்துவிட்டோம். பாவம் இப்போதெல்லாம் அம்மா மிகவும் ஆபத்தான நிலையிலேயே இருக்கிறார்.
இது இப்படியிருக்க, இந்த வார ஆரம்பத்திலிருந்தே அம்மா மிகவும் மூர்க்கத் தனத்துடன் கொடூரமான முறையில் எங்களிடம் நடந்து வருகிறார். அவரை பார்க்கவே வரவர எங்களுக்கு பிடிப்பதில்லை. நரக வேதனையாக போய்விட்டது. தொலைக்காட்சி இனி தேவையில்லை என்று பெட்டியை தூக்கி குப்பையிலே வீசி எரிந்துவிட்டார், வானொலியும் தேவையில்லை என சொல்லிவிட்டார். இணையம் கூடாது எனவும் இழுத்து பூட்டிவிட்டார். வெளி உலகத்துடன் உள்ள ஒரே தொடர்பு வீட்டில் உள்ள தொலைபேசி மட்டும்தான். அதற்கும் நிறைய நிபந்தனைகள், கண்டிப்புகள், கவனிப்புகள்.
வார இறுதியை நெருங்க நெருங்க அவரது அராஜக போக்கிற்கு எல்லை இல்லாமல் போய்விட்டது. ஞாயிறு வந்தது. வீடோ வெறிச்சோடி கிடந்தது. அம்மா படுக்கையை விட்டு எழுந்திரிக்கவே மிகவும் நேரம் பிடித்தது. இன்று மிகவும் மௌனமாகிவிட்டிருந்தார். கூச்சல் அதிகம் எதுவும் இல்லை. இருந்தாலும் எப்போதும்போல் படபடப்புதான். காலையில் ஏதோ வேலை என்று வெளியே சென்றவர் இருட்டிய பின்னரே வீடு வந்தார். மதியம் சாப்பாட்டிற்கு எங்களை வீட்டில் இருப்பதை வைத்து எப்படியாவது சமாளிக்க சொல்லிவிட்டார். அன்று முழுதும் அவரை பார்க்காமலே நாள் ஓடியது. மறுநாள் திங்கள் கிழமை ஆகையால் அனைவரும் நேரத்திற்கு அடங்கிவிட்டோம்.
மறுநாள் திங்கட்கிழமை.
பேருந்தில், முன் ஆசனத்தில் இருந்தவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்து கீழே விழுந்த ஒரு வகை வாழ்த்து அட்டையை எடுத்து அவரிடம் கொடுக்கும் போது அதே வேகத்திலே சட்டென ஒரு கனத்தில் என்ன அட்டை என்பதை புரிந்துகொண்டேன். அவரது முகம் பார்க்காமலே அதை கொடுத்த வேகத்தில் அங்கிருந்து நழுவி விட்டேன். கொஞ்சம் வியர்க்கவும் ஆரம்பித்து விட்டது. இலேசான நடுக்கம் வேறு. எது எப்படியோ? அந்த மனிதர் என்னை என்னை எதுவும் கேட்டுவிடக்கூடாது என்பதிலேயே குறியாக இருந்தேன்.
"ரொம்பவும் நன்றிம்மா, இது நேத்து என் மகள் எனக்கு எழுதின தந்தையர் தின வாழ்த்தும்மா. நீயும் உன் அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்தாயம்மா?" என்று கேட்டுவிட்டால் நான் என்ன சொல்வது? "இல்லை சார் எங்க அப்பா இறந்து சில காலம் ஆவுதுன்னு" எல்லாருடைய எதிரிலும் கதைக்கவா முடியும்.
அம்மாவின் அளவுக்கதிகமான குரோத போக்கைப் பற்றிய கருத்து இப்போது இக்குழந்தைகளுக்கு புரிந்திருக்க நியாயமில்லை என்றாலும் காலம் அவர்களுக்கு அதை அவர்களுக்கு கட்டாயம் புரியவைத்துவிடும். ஆடம்பர, விளம்பர, வியாபார உலகமாகிவிட்ட இக்காலங்களில் தந்தையர் தினம் என்கிற வேதனை தினத்தை தன் குழந்தைகள் அறியா வகையில் மறக்கடிக்க செய்த போரே
அம்மாவின் இந்த வார சிறப்பு அராஜகம்.
பாவம் குழந்தைகள்!
பாவம் அம்மா!
இது போன்ற குழந்தைகளுக்கு தந்தையர் தினம் ஒரு தேவைதானா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக