23 ஆகஸ்ட், 2007

பெண் சிசுக்கொலைகளை எப்படி தடுக்கலாம்? சில யோசனைகள்.

சமீப காலங்களில் வெளியான செய்திகளில் மிகவும் அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்த சிசு கொலைகள் பற்றிய பரபரப்புகள் அடங்கிவிட்டன. மக்கள் மறுபடியும் ஊடக தத்துபிதற்றல்கள், சினிமா, சின்னத்திரை, பொழுது போக்குகள், அரசியல், நுகர்தல் போன்ற சாதாரண பிசுபிசுத்துப்போன காரியங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

என் மனதில் இந்த கொலைகள் மிகுந்த பாதிப்பை உண்டாக்கி இருந்ததால், இதை அடிக்கடி யோசித்து, இது போன்ற அநியாயங்கள் நடாவாதிருக்க என்ன செய்யலாம் எனறதின் விளைவுதான் இந்த பதிவு. வலைஞர்கள் தங்கள் கருத்தையும் தெரிவிக்கலாம். நம்மால் முடிந்ததை செய்து பார்ப்போம். முயற்சி செய்தால் எதுவும் நடக்கும்.

சரி, இப்போது முதலாக எனது யோசனை.

இந்தியாவில் உள்ள திருமணம் ஆன அனைத்து மாதர்களையும் மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனைக்கு உட்படுத்தி கருதரிப்பு கணக்கெடுக்கலாம். கிடைக்கும் முடிவு 'உண்டு' என்றால், அபோதிருந்து பிரசவம் ஆகும் வரை, மாதத்திற்கு ஒருமுறை கட்டாய கண்கானிப்பு என்கிற முறை அமல் படுத்தி தொடர்ந்த பராமரிப்பு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் தாய்க்கு சத்துணவு, நோய் தடுப்பு மருந்துகள் ஆகியவைகள் கொடுத்து திடகாத்திரமான சமுதாயத்தை உருவாக்க அடிகோள் இடலாம். குடும்பங்களின் வருமானத்தை பொருத்து தேவைப்பட்டவர்களுக்கு ஊக்கப்பணமாக மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.500 அல்லது ரூ.1000 கொடுத்து உதவலாம்.

அல்லது பரிசோதனை எதுவும் செய்யாமாலேயே, கருதரித்தவுடன் அரசாங்க அமைப்புகளில் தங்களது நிலையை தாமாகவே வந்து அறிவிப்பு செய்கிறவர்களுக்கு இதுபோல் ஊக்கப்பணம் கொடுத்தும் மேலும் சத்துணவு, பராமரிப்பு, நோய் தடுப்பு மருந்து ஆகிய வசதிகளை செய்தும் கொடுக்கலாம். இந்த சமயத்தில் இருந்து பிரசவமாகும்வரை, மாதாமாதம் அவர்கள் தங்கள் நிலையை நல அமைப்புகளுக்கு வந்து அறிவிப்பதுடன், மருத்துவர்களின் சோதனைகளுக்கு உட்படுத்தவும் செய்யப்படவேண்டும்.

இதன் மூலம், சிசுவானது அதை சுமக்கும் தாய்க்குமட்டும் சொந்தம் என்கிற நிலையை தாண்டி சமுதாயத்தில் ஏறக்குறைய ஒரு தனிமனிதன் போன்ற உரிமைகள் பெற ஆரம்பிக்கும். இதனால், தாய் அல்லது தகப்பன் தங்கள் விருப்பம் போல் சிசு சம்பந்தப்பட்ட எந்த அனாவசிய ஆபத்தான முடிவுகள் எடுக்கும் உரிமைகளையும் இழக்கிறார்கள் என்பதை சட்டமாக்க வேண்டும்.

இந்த உதவிப்பணம் என்பது, குழந்தை பிறந்து எட்டு பத்து வயது வரைக்கும் கொடுக்கப்படவேண்டும். மேலும் பிறப்பது பெண் குழந்தையாக இருந்தால், உதவித்தொகை இரட்டிப்பாக்கப் படவேண்டும்.

உங்கள் கருத்து அல்லது யோசனை ...

நன்றி.

5 கருத்துகள்:

  1. பெண் சிசுக்கொலைகளை பற்றிய உங்கள் சிந்தனைகளை வரவேற்கிறேன்!

    இந்தக் கொலைகளை எப்படி தடுக்கலாம்? என் யோசனைகள்....

    இந்தக் கொலைகளின் மூலக் காரணாமாக எனக்குத் தோன்றுவது, பெண் அடிமைத்தனமும், அது சான்ற பிரச்சனைகளுமே!!

    இவைகள் ஒழியாமல் பெண் சிசுக்கொலைகளை தடுப்பது என்பது கடினம் தான்!!!!

    பதிலளிநீக்கு
  2. மாசிலா,

    உங்கள் சிந்தனை சிறப்பானது. ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டியவை சில உள்ளன.

    மக்கள் நலப்பணியாளர்கள் என கிராம சுகாதார நிலையங்களில் நியமித்து ஏற்கனவே இது போன்ற கர்ப்பிணி பெண்களை கணக்கெடுத்து , அவர்கள் குழந்தைப்பெறும் காலம் வரைக்கும் மாதம் தோறும் ஊட்ட சத்து மருந்து , மேலும் அவர்களில் ஏழைகளுக்கு பிரவச கால நிதியும் தரும் திட்டம் செயல்படுகிறது.

    இதில் என்ன குறை என்றால் வழக்கம் போல் ஊழல் தான். பொய்யான பயணர்களைக்காட்டி மருந்து , உதவிப்பணம் கொடுத்ததாக கணக்கு காட்டி கையாடல் செய்துவிடுவர்கள், பேருக்கு ஊருக்கு 10 பேருக்கு உதவி செய்திருந்தாலே அதிகம்.

    ஏற்கனவே மக்கள் தொகை கட்டுப்படுத்த முடியவில்லை இதில் பிறக்கும் குழந்தைக்கு எல்லாம் பண உதவி அளித்தால் . அவ்வளவு தான் ஜெட் வேகத்தில் குழந்தை பெற்று தள்ளி விடுவார்கள்.

    பெண் சிசு கொலைக்கு காரணம், கல்யாணம் செய்ய ஆகும் செலவுகள் தான், ஆண் எனில் வரதட்சணை வரும், பெண்ணுக்கு செலவு ஆகுமே என்று கணக்கு செய்து தான் அப்படி பெண் சிசுக்களை அழிக்கிறார்கள்.

    மேலும் ஆண் வாரிசு தான் கடைசிக்காலத்தில் தனக்கு கொள்ளி வைக்கும் , சோறு போடும் போன்ற நம்பிக்கைகளும் தான்.

    பெண்களும் கொள்ளி வைக்கலாம். என்றாவது சட்டம் போட வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. வாங்க தோழியரே எண்ணப்பறவை.
    //இந்தக் கொலைகளின் மூலக் காரணாமாக எனக்குத் தோன்றுவது, பெண் அடிமைத்தனமும், அது சான்ற பிரச்சனைகளுமே!!//

    நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. இச்சிசு கொலைகளில் அதிகம் ஈடுபடுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் அல்லது ஏழைகள் ஆகியவர்களே. கண்டறியப்பட்ட கொலை சம்பவங்களின் விசாரணைகள் எந்த அளவில் இருக்கின்றன என்று தெரியவில்லை. இருந்தாலும் இக்கேடுகளில் ஈடுபட்டவர்களில் படித்தவர்களே அதிகம்போல் தெரிகிறது.

    ஆண்களை வெறும் பணம் செய்யும் இயந்திரமாக மட்டும் பார்க்கும் தாயார்களும் இதில் அதிகம் அடக்கம் என நினைக்கிறேன்.

    உங்கள் வழியில் விவாதத்தை கொண்டுசெல்ல வேண்டுமானால், ஆணுக்கும் பெண்ணுக்கும் அனைத்திலும் சமத்துவம் தேவை.

    இருப்பினும் நாம் இந்தை ஏழ்மை, அல்லது பெண்ணடிமை என்கிற மிகப்பெரிய வேலிகளின் முட்களில் சிக்காமல் வேறு வழியில் உடனடி தீர்வுகளுக்கு வழிதேட பார்ப்போமே!

    ஏனென்றால், நான் கடைசியில் மேற்கூரிய இரண்டு கருத்துக்களையும் தொலை நோக்கு நீண்டகால மனப்பக்குவ மாற்றங்கள் மூலம்தான் தீர்க்க முடியும்.

    நன்றி தோழியரே.

    பதிலளிநீக்கு
  4. வாங்க வவ்வால். //மக்கள் நலப்பணியாளர்கள் என கிராம சுகாதார நிலையங்களில் நியமித்து ஏற்கனவே இது போன்ற கர்ப்பிணி பெண்களை கணக்கெடுத்து , அவர்கள் குழந்தைப்பெறும் காலம் வரைக்கும் மாதம் தோறும் ஊட்ட சத்து மருந்து , மேலும் அவர்களில் ஏழைகளுக்கு பிரவச கால நிதியும் தரும் திட்டம் செயல்படுகிறது.// நீண்ட காலம் அயல் நாட்டில் வசிப்பதால் இதை அறியாமல் போனேன். தகவலுக்கு நன்றி.

    //இதில் என்ன குறை என்றால் வழக்கம் போல் ஊழல் தான். பொய்யான பயணர்களைக்காட்டி மருந்து , உதவிப்பணம் கொடுத்ததாக கணக்கு காட்டி கையாடல் செய்துவிடுவர்கள், பேருக்கு ஊருக்கு 10 பேருக்கு உதவி செய்திருந்தாலே அதிகம்// மனிதாபிமானமற்ற மனிதர்கள் இருக்கும்வரை சமூகம் உருப்படாது. சமூகத்தின் மீது அக்கறை உள்ள எவரும் இது போல் செயல்படமாட்டார். நம் சமூதாய எதிரிகளே இவர்கள்.

    //ஏற்கனவே மக்கள் தொகை கட்டுப்படுத்த முடியவில்லை இதில் பிறக்கும் குழந்தைக்கு எல்லாம் பண உதவி அளித்தால் . அவ்வளவு தான் ஜெட் வேகத்தில் குழந்தை பெற்று தள்ளி விடுவார்கள்.// உங்களின் இந்த கூற்றை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன் வவ்வால் ஐயா.

    இன்னும் வருகிற சில பத்தாண்டுகளில் இந்தியாவில் அதன் பொருளாதார தொழில் முன்னேற்றங்களுக்கு ஈடுகொடுக்க நாட்டை கொண்டு செல்ல நிறைய இளைஞர்கள் தேவைபடுவர். மக்கள் அதிகம் என சொல்வது சரியாகாது.

    ஒரு வேளை மக்கள் பற்றாக்குறை என்கிற நிலைக்கே வரலாம். உலக மக்கள் தொகை நிலவரம் பற்றிய வல்லுனர்கள் சீனாவிற்கு இந்த கணிப்பைத்தான் முன்வைத்திருக்கிறார்கள். இந்தியாவிற்கு இந்த நிலை வராதாம். ஏனென்றால், சீனர்கள் தங்கள் நாட்டில் அமுல்படுத்திய "ஒரு குடும்பம் - ஒடு குழந்தை" என்கிற கட்டாய குடும்ப கட்டுப்பாட்டை இந்தியா அமுல் படுத்தாமல் மக்களின் சுதந்திர முடிவுக்கு விட்டதன் பலன். இதனால், வரும் பத்தாண்டுகளில், சீவாவைவிட இந்தியாவில் அதிக இளைஞர்கள் இருப்பர். வேலைகளுக்கு போதிய திறமை வாய்ந்தவர்களும் கிடைப்பர். சீனாவோ அயல் நாட்டு மக்களை நாடும் நிலைக்கு தள்ளப்படுவர்.

    //பெண் சிசு கொலைக்கு காரணம், கல்யாணம் செய்ய ஆகும் செலவுகள் தான், ஆண் எனில் வரதட்சணை வரும், பெண்ணுக்கு செலவு ஆகுமே என்று கணக்கு செய்து தான் அப்படி பெண் சிசுக்களை அழிக்கிறார்கள்.//

    இந்த நிலை கட்டாயம் மாறவே வேண்டும். அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வரும் இந்திய பொருளாதாரம், இதன் வழி வரும் இளைஞர்களின் பொருளாதாரம் தன்னிறைவு கண்டதும் இது தானாகவே மறைந்துவிடும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறேன்.

    //மேலும் ஆண் வாரிசு தான் கடைசிக்காலத்தில் தனக்கு கொள்ளி வைக்கும் , சோறு போடும் போன்ற நம்பிக்கைகளும் தான்.//

    வருத்தமளிக்கு மூட நம்பிக்கைகள். இது தனியாக அலசப்படவேண்டிய கருத்து.

    நான் தோழியர் எண்ணப்பறவைக்கு எழுதியதுபோல், ஆண்களை பணம் செய்யும் இயந்திரமாக பார்க்கும் நிலை மாறவேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் வேண்டும். ஆணில்லையேல் பெண்ணில்லை. அதே போல் பெண்ணில்லையேல் ஆணும் இல்லை என்பதை சமுதாயம் நன்கு உணர வேண்டும்.

    அனைத்து மதங்களிலும் ஆண் கடவுள்களின் ஆதிக்கமும் இதற்கு ஒரு காரணம்.

    தொடர்ந்த கடுமையான விழிப்புணர்வு போராட்டங்கள் மூலம்தான் இச்சிசு கொலைகள் போன்ற அநியாயங்களை தடுக்க முடியும்.

    வருகை தந்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதற்கு மிக்க நன்றி வவ்வால் ஐயா.

    புதியோர் உலகம் செய்வோம்!

    பதிலளிநீக்கு
  5. மாசிலா!
    உங்கள் நோக்கத்தை நன்கு உணர்கிறேன். ஆனாலும் என் மனதில் பட்ட கருத்துக்களை, நடைமுறையில் நான் கண்டவற்றையும் கூறுகிறேன்.

    பொருளாதாரச் சிக்கல் என்பதை விட நமது சமுதாயத்தில் பெண்ணின் மதிப்பீட்டில் குறைபாடு உள்ளது.
    உலகில் பல நாடுகலில் உள்ள பெண்ணுக்கு உள்ள சுதந்திரம்; நம் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லை.
    இந்தச் சுதந்திரம் குறைந்த பெண்ணை; சுயமாக முடிவெடுக்க முடியாத ஜீவனாகவே இந்தச் சமுதாயம் கருதுகிறது. இது படித்தவர்கள் மத்தியிலேயே உண்டு.
    ஒரு தமிழ் ஆண்; திருமணம் செய்யாது வாழலாம்.அது பற்றி அவனைப் பெற்றவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் இதே ஒரு பெண்ணானால் ..."ஐயோ கண்ணை மூடுமுன் யார் ,கையிலாவது பிடிச்சுக் கொடுத்தா தான் நிம்மதி"...அதாவது ஒரு பாரமாகக் கருதுகிறார்கள்.

    அதனால் இந்தப் பாரத்தைச் சுமக்க அஞ்சி தவிர்க்க முற்படுகிறார்கள்.
    அடுத்து நம் சமுதாயத்தில் உள்ள ஆணுக்கு ஒரு சட்டம்; பெண்ணுக்கு ஒரு சட்டம்....ஆண் கெட்டால் சம்பவம்;பெண் கெட்டால் சரித்திரம்.

    ஆண் சேறு கண்ட இடத்தில் மிதித்து;தண்ணீர் கண்ட இடத்தில் கழுவலாம். கழுவிக் கழுவி தலைவனாகவே வந்தவர்களும் உண்டு. ஆனால் கற்புக் கத்தரிக்காய்...பெண்ணுக்கே...இவ்வளவு பெரிய சுமையைச் சுமக்கும் பெண் நமக்குத் தேவையா???என பெற்றவர் கருதுகிறார்கள்...

    பெண் வயதுக்கு வந்துவிட்டாளோ? நம் சமுதாயம்...."இவளைக் கட்டிக் கொடுக்கும் வரை..;மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல்" என்கிறது.
    இது யாரால் உருவானது.

    "வண்டு வந்து தேன் குடித்தால் மலருக்குத் தான் தண்டனை".....; விடுதியில் அழகிகள் கைது...எனத் தான் செய்தி வருகிறது...

    கற்பெனில் இருவருக்கும் பொதுவில் வைப்போம் என்றான் பாரதி.....,இப்போ பொதுவிலா? இருக்கிறது நம் சமுதாயத்தில்.

    பல இளைஞர்கள்...வாலிபத்துக்கு வடிகால் தேடிப் போகிறார்கள்; ஆனால் திருமணம் என்றதும் கறைபடியாக் கன்னி தேடுகிறார்கள்.
    ...,இப்படி வடிகால் தேட நம் சமுதாயத்துப் பெண்ணுக்கு ஏன் உரிமையில்லை.

    கலாச்சாரம் காக்க வேண்டியது பெண்ணில் கடமை மாத்திரமா???
    கண்ணகிக்குச் சிலை வைத்தீர்களே; மாதவிக்கு ஏன் வைக்கவில்லை...

    இது மாத்திரமா? ‘’ஐந்து பெண்ணானால் அரசனும்,ஆண்டியே!’’ சீதனத்தை மனதில் வைத்து சொல்லப்பட்டது.
    படித்த பெண் கூட கலியாணச் சந்தையில் கொழுத்த சீதனத்துடன் தயாராக இருக்க வேண்டியுள்ளது. படிப்புச் செலவு பின் கலியாணச் செலவென பெற்றோருக்கு இரட்டிப்புச் செலவு. இதே ஆணெனில் செலவைப் போல குறைந்தது 2 மடங்காவது வசூல் செய்து விடுவார்கள்.

    ஆண்களுக்கே படித்த பின் வேலை வாய்ப்பில்லாது, வெளிநாடுகளை எதிர்பார்க்கும் நிலையில் பெண்களைப் படிப்பித்து என்ன காண்பது என்றே
    சில பெற்றோராவது நினைக்கிறார்கள்.

    இப்படி மொத்தமாக நமது சமுதாய அமைப்பு பெண்களுக்கு ‘’சித்திரத்தில் பெண்ணெழுதிச் சீர்ப்படுத்துமாணினமே, ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா?’’ என இருப்பதால் , பெண்ணைப் பெற இந்தச் சமுதாயம் பயப்படுகிறது.

    இதற்காக வெட்கப்பட வேண்டியது, இந்தச் சமுதாய அமைப்பே.
    இந்த நூற்றாண்டில் இந்தச் சமுதாயம் ,மாறுமெனும் நம்பிக்கை எனக்கில்லை.

    அடுத்த நூற்றாண்டில் ,மாற்றம் வரும் போது, உலகப் பெண்கள் சமுதாயம்
    எங்கே போய்விடும். அப்போதும் எங்கள் தமிழ்ப் பெண்கள் நிலையில் இடைவெளி இருந்தே தீருமென்பதே கசப்பான உண்மை.

    எனினும் எமது தளிர்களுக்கு பெண்ணின் பெருமையை, இளமையிலே ஊட்டி அடிப்படையிலேயே மாற்றத்தைக் கொண்டுவர முயல்வோம்.

    பதிலளிநீக்கு