1 ஆகஸ்ட், 2009

மனித உரிமை பாதுகாப்பு குழுவினர் மீதான சீனாவின் அடக்குமுறை!

சீனாவின் வீரிய ஆற்றல் படைத்த மனித உரிமை பாதுகாப்பு குழு சட்ட வல்லுனர்கள் மீது சீனா மேலும் மேலும் அளவுகடந்த அடக்குமுறைகளை பிரயோகித்து வருகிறது.

சீனாவின் மனித உரிமை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்ட வல்லுனர்களின் இயங்கு தளமாக கருதபட்ட, கடந்த ஜூலை 17 அன்று அரசு அதிகாரிளால் மூடப்பட்டதுமான 'கொங்மெங்' அமைப்பின் நிறுவனர்களின் ஒருவரான 36 வயது 'க்சு ஜியோங்' பீக்கிங்கில் ஜூலை 29 அன்று விடியற்காலை கைது செய்யப்பட்டார்.

'கொங்மெங்' அமைப்பின் நிதி கணக்குகளி்ல் சில பிணக்குகள்(?) பெயரில் வருமானவரி அலுவலகம் ஜூலை மாத இடையில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக கடந்த வெள்ளிக் கிழமை இவ்வமைப்பின் சட்டபூர்வ பிரதிநிதியான 'க்சு ஜ்யோங்' வருமானவரி அலுவலகத்திற்குநேரில் சென்று ஆஜர் ஆகியிருக்க வேண்டும் என அமைப்பு சார்பு வக்கீல் 'லி க்சியோங்பிங்' கூறினார்.

எய்ட்ஸ் மற்றும் ஹெபாடிடிஸ் (Hepatitis) நோயாளர்களை தீண்டப்படாதவர்களாக கருதும் சமுதாய மனப்போக்கினை கண்டித்து எதிர்த்து போராடும் மற்றுமொரு அமைப்பான 'இ ரென் பிங்' (Yi Ren Ping) சங்கத்தின் அலுவலகங்களையும் ஜூலை 29 அன்று காவல் துறையினர் முற்றுகையிட்டு அனைத்து கோப்புகளையும் கைப்பற்றினர். இச்சங்கமானது கலப்பட பால் மாவு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பாக 'கொங்மெங்' அமைப்புடன் சேர்ந்து நீதிக்கு வாதாடியது.

'கொங்மெங்'கிற்கு ஜூலை 14 அன்றைய தேதியில் வருமான வரி அலுவலகத்திலிருந்து 1,4 மில்லியன் யுவான் (1,9 மில்லியன் ஈரோ) வருமானவரி பாக்கி தொகை கேட்டு வந்த ஒரு கடிததிலிருந்துதான் முழு பிரச்சினையும் ஆரம்பித்தது. இக்கடிதம் கிடைத்த மறுநாள் 'க்சு ஜியோங்' வெளியிட்ட அறிக்கையில் இதனை 'அடாவடி நடவடிக்கை' என குறிப்பிட்டார்.

அமெரிக்கவின் 'யால்' சட்டக்கல்லூரியின் தானத்திலிருந்து பெறப்பட்ட 'கொங்மெங்'கின் வருமானத்தின் நிதிக்கணக்குகள் வருமான வரித்துறையினருக்கு போதிய வேளைகளிகல் சரிவர சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதை தவிர, குறிப்பிட்ட திட்டங்களுக்கு என்று இன்னும் ஒதுக்கப்படாத ஒரு சில முன்பணத் தொகைகள் மட்டுமே இன்னும் கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தது என்றும் அவர் கூறினார்.

அரசாங்க உத்தரவு பெறாத அன்னிய கூலிகளின் அரசு சார்பற்ற அமைப்பாக 'கொங்மெங்' செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டின் பெயரில்தான் ஜூலை 17 அன்று காவல் துறையினர் இதன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


சீனாவின பலதரப்பட்ட அரசு சார்பற்ற அமைப்புகளைப் போல 'கொங்மெங்' ஒரு சட்ட அலோசனை வழங்கும் தளமாக பதியப்பட்டிருக்கிறது. இதன்படி, 2003 இல் 'கொங்மெங்' வியாபார தொழில் நோக்கற்ற அமைப்பாகவே பதியப்பட்டிருக்கிறது. இருப்பினும், ஓராண்டு கழித்து அரசு அதிகாரிகள் இதனை மூடும்படி உத்தரவு போட்டிருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே 'கொங்மெங்' சட்டவல்லுனர்கள் பலதரப்பட்ட முக்கியம் வாய்ந்த பொது வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக வாதாடி வந்துள்ளனர். கலப்பட பால் மாவு வழக்குகள் மட்டுமல்லாது, காவல் துறையினரின் பொதுமக்கள் மீதான அத்துமீறிய அடாவடி செயல்களை எதிர்த்தும், 'பாலுன் கோங்' (Falun Gong) சார்பு மத குழுவினர் சார்பாகவும், திபெத்தியர்கள் சார்பாகவும் பலவகைப்பட்ட விவகாரங்களில் சட்ட ஆலோசனைகள் தந்தும் சார்பான வழக்குகளில் வாதாடியும் வருகின்றனர். சமீபத்தில், சீன அரசாங்கம் அனைத்து கணினிகளிலும் கட்டாயமாக நிறுவப்போகும் கட்டுப்பாட்டு-கண்கானிப்பு மென்பொருள் திட்டத்தை எதிர்த்தும் இவ்வமைப்பு குறல் கொடுத்தது. ஜூன் மாத வாக்கில், மிகுந்த கேள்விக்குள்ளான திபெத்தின் சீன பொருளாதர வளர்ச்சி சம்பந்தமாக மிகவும் கவலைக் குறிய ஒரு விசாரணைக் கட்டுரையையும் 'கொங்மெங்' வெளியிட்டிருந்தது.

இதை எல்லாம் சகித்து கொள்ள முடியாத சீன அரசு 'கொங்மெங்' கை அடக்கி அச்சுறுத்தி மொத்த மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகளையும் நசுக்கி வருகிறது. அரசாங்கத்தின் எல்லை மீறிய அழுத்தம் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே இவை போன்ற இருபதுக்கும் அதிகமான அமைப்புகள் மற்றும் இதன் கிளைகள் தங்கள் பதிவு பத்திரங்களை புதுப்பிக்காமல் விட்டுவிட்டன.

இவ்வமைப்புகளை சேர்ந்த அங்கத்தினர்கள் சிலரை அரச பாதுகாப்பு குழுக்கள் ஆள் கடத்தல் செய்தும் மிரட்டி வந்தனர். இப்படித்தான் 2008இல் 'கொங்மெங்'இன் மற்றுமொரு நிறுவரான 'டெங் பிஅஓ' கடத்தப்பட்டார்.

சட்ட வல்லுனரும் 'பீக்கிங்'கின் தொலை தொடர்பு பல்கலை கழகத்தின் சட்டத்துறை பேராசிரியரும், 'பீக்கிங்'கின் 'ஹைடியன்' நகர மக்கள் அவை பிரதிநிதியுமான 'க்சு ஜியோங்' சதா எப்போது களங்களில் இரங்கி பாதிக்கப் பட்டவர்களின் விசயங்களை தொடர்ந்து சேகரிப்பதிலேயே மும்முரமாய் இருப்பார்.

அகிம்சை கொள்கையை பின்பற்றும் இவர், இவரது மற்ற சில சக போராளிகள் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் 'பீக்கிங்'கின் "மர்ம சிறை"யின் காவலர்களை எதிர்த்தும் அவர்களின் கோபத்திற்கு ஆளானதும் உண்டாம்.

நீண்ட காலமாகவே அதிகாரிகள் இது போன்ற அரசு சார்பற்ற அமைப்புகள் அனைத்தையும் முக்கியமாக 'கொங்மெங்' போன்ற அமைப்புகளை அரச இயந்திரத்தின் கட்டுப்பாட்டை மீறி வருவதாகவும், மேற்கத்திய நாட்டு கூலிகள் தயவில் செயல்படுவதாகவும் கருதி வந்தனர். மேலும் இவை போன்றவைகளின் நடவடிக்கைகளினால், நாட்டில் புதிதாக 'நிறப்புரட்சி' (Color revolution) உருவாக வாய்ப்பு இருப்பதாக அரசாங்கம் நம்பி வருகிறது என்றும் 'கொங்மெங்'கை நெருங்கிய மற்றுமொரு அரசு சார்பற்ற சட்ட வல்லுணரான 'லி பாங்பிங்' விளக்கினார்.

ஆதாரம் : லெ மோந் (www.lemonde.fr)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக